Redhat Commercial - Good one

Nov 10

Source: from Internet

மாம்பழம்

May 09

செழிப்பான மல்கோவா மாம்பழம், அதுவும் பறிப்பதற்கு ஏதுவா தாழ்ந்த கிளைகள், அதுக்கு அருகில் நான், ஒரு கையில் மாம்பழம், இன்னொரு கையில் சுஜாதா புத்தகம்! அட்டகாசமான தனிமை!! பிள்ளையாரப்பா!!! சொர்க்கம் பூமியில் கண்டேன்!! இதுதான் அடிக்கடி எனக்கு வரும் கனவு, 

எனக்கு எழுத்து கூட்டி படிக்க தெரிந்த காலத்தில் இருந்தே இந்த கனவு வரும். ஆனா கையில் உள்ள புத்தகம் மட்டும் வயதுக்கு ஏற்றாற்போல் மாறும். சிறுவர்மலரில் இருந்து பயணம் ஆரம்பித்தது. இப்போ இந்த கனவு முக்கியமில்லை. இந்த கனவின் நாயகிதான் முக்கியம். சே !! என்னப்பா நீங்க நாயகின்னு சொன்னவுடனே நாந்தான்னு தப்பா நினச்சுகிடீங்க!! ஐயோ கடவுளே!! ஏன்தான் என்னை அழகா படைச்சியோ? சரி விடுங்க!!! கதையோட நாயகி என்னை விட, ஏன் ஐஸ்வர்யா ராய்- விட அழகான என்னோட மாம்பழம் தான், இந்த பதிவே என்னோட ஆதர்ச நாயகிக்கு ஒரு அர்பணிப்புதான்.

சின்ன புள்ளைல படிச்ச பாடம் "மனிதன் உயிர் வாழ இன்றி அமையாத தேவைகள் நிலம் நீர் காற்று". இது கூட கடவுள் மாம்பழத்தையும்
சேர்த்து இருந்தா எவ்வளவு நல்ல இருந்து இருக்கும்?
மாம்பழம் - இந்த வார்த்தை சொல்லும்போதே எனக்கு சொர்கத்தை பார்த்துவிட்ட உணர்வு.எதை வேண்டுமானாலும் இதுக்காக விட்டு கொடுப்பேன், ஆனா யாருக்காகவும் இதை விட்டு கொடுக்க மாட்டேன்
அப்பா சின்ன வயசில, மாம்பழம் வேணுமா, ரஜினி படம் பார்கனுமா(ரஜினி படம் வெளி வந்த அன்னைக்கே பார்ப்பதை ஒரு கொள்கையா வைத்து இருந்தேன்) சீண்டி பார்த்த போது கொஞ்சம் கூட யோசிக்காம, மாம்பழம் தான் வேணும்பா என்றேன். ஆனா மாம்பழம் சாப்டுகிட்டே ரஜினி படம் பார்த்தது வேற கதை.

ஜென் துறவிகள் தேநீர் குடிப்பதை கூட ஒரு தவமாய் நினைத்து, ரொம்ப சந்தோஷமா ஒவ்வொரு துளியையும் ரசித்து குடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருப்பீங்க. அதை நேரில் பார்க்கணும்னு ஆசைபடீங்கன்னா நான் மாம்பழம் சாப்பிடும்போது என் வீட்டுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா உங்களுக்கு பங்கு தர மாட்டேன்.

மாம்பழம் சாப்பிடும்போது அதுக்காக மட்டுமே கடவுள் என்னை படைச்சதா நினைச்சுக்குவேன். வேற படிப்பு , வேலை அப்படீன்னு எந்த கெட்ட விஷயத்தயும் நினைக்க மாட்டேன்.

மாம்பழ காலம் வந்துட்டாலே, எங்கப்பாக்கு கதி கலங்கிரும். சின்ன வயசில இருந்து நான் எதுக்காகவும் அடம் பிடிக்கவே மாட்டேன். எதை வாங்கி கொடுத்தாலும் மறு பேச்சு பேசுவதே இல்லை. உடை, அலங்கார பொருட்கள் எதுலயும் பெரிசா நாட்டம் இருந்தது இல்லை. அம்மா, அப்பா சொன்னா மறு பேச்சு சொல்லமா கேட்டுக்குவேன். ஆனா மாம்பழ விஷயத்தில் மட்டும் என் பேச்சு மட்டும்தான் எல்லோரும் கேக்கணும்.

சின்ன வயசில இருந்தே என் செல்லம் பிள்ளையாரோட ஒரு ஒப்பந்தம். எனக்கு கிடைக்கிற இல்லை நான் வாங்குற முதல் மாம்பழம் அவருக்குதான். கொடுக்க கஷ்டமா இருந்தாலும், யோசிக்கமா கொடுத்துருவேன். என் தங்கம் , அதுக்கு, கை மேல இல்லை இல்லை கை கொள்ளாம மாம்பழம் கொடுக்கும்.

மாம்பழ காலம் முடிஞ்ச கொஞ்ச நாளைக்கு எல்லாம் நான் தாடி வைக்காத தேவதாஸ்தான். நம்ம தமிழ் செய்யுள் படிக்குபோது அக பாடல்களில் தலைவிக்கு வருமே ஒரு பசலை நோய், அந்த மாதிரி ஒரு நோய், எனக்கு மாம்பழ காலம் முடிந்தவுடனே வரும். ஆனா மணந்தா மகாதேவன் , இல்லேன்னா மரண தேவன் என்கிற மாதிரி, செயற்கை மாம்பழ பானங்களில் என் மனம் லயிப்பதே இல்லை.

சின்ன வயசில நடந்த விஷயம்,இன்னும் மறக்கவே இல்லை. எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். மாம்பழ காலம். வழக்கம் போல அப்பா மாம்பழம் வாங்கி நிரப்பி இருந்தாங்க. அரிசி பானையில் போட்டு வைக்கும் வழக்கம். காலையில எந்திச்சவுடனே நேரா வந்து பானை திறந்து எல்லா பழத்தையும்  ஒரு தடவை ஆசை தீர பார்ப்பேன். இது மாதிரி ஒரு நாளில் பல முறை நடக்கும். பள்ளியில் வைத்தும் ஒரே மாம்பழ கனவுதான். மத்யானம் சாப்பிட பழம் எடுத்துட்டு போக மாட்டேன் எல்லோருக்கும் பங்கு கொடுக்கணுமே!!

இப்படியே போயிட்டு இருந்தது. அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்கு, எங்க அம்மாவோட பள்ளி தோழி அவங்க குடும்பத்தோட வந்து இருந்தாங்க. அந்த பையன் ஒரு அஞ்சாவது படிச்சுட்டு இருந்தான்னு நினைக்கிறேன். நான் மறுநாள் காலையில் எழுந்து என் கடமைகளை (?) எல்லாம் பொறுப்பா பண்ணிட்டு , ஸ்கூல் கிளம்பி போய்ட்டேன். ஸ்கூலில் வழக்கம் போல் என் மாம்பழ கனவு. வீட்டுக்கு வந்து பார்த்தா, என் இதயமே ஒரு நிமிடம் நின்னுரும் போல ஒரு உணர்வு. எனக்குள்ள ஒரு எரிமலை!!! படுபாவி, அந்த பையன் ஒரு மாம்பழத்தை சாப்டுகிட்டு இருந்தான். எனக்கு எப்பிடி இருந்து இருக்கும்னு யோசிச்சு பாருங்க. நான் எதையும் யோசிக்கலை , 
வில்லன் கிட்ட இருந்து கதாநாயகியை காப்பாத்த போற ஹீரோ மாதிரி அவன் மேல பாய்ஞ்சேன் . அவன் சோட்டா பீம் மாதிரி இருப்பான். நான் முருங்கக்காய்க்கு கால் முளைச்ச மாதிரி இருப்பேன். (சின்ன வயசுல பா) 

அவங்க அம்மா, "பார்வதி , உன் பொண்ணை பிடி , அவனடிச்ச தாங்க மாட்டா, சின்ன பொண்ணு" அப்படீன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள , ஒரு சத்தம். என்ன ஆச்சுன்னு எங்க அம்மா பயந்து போய் வந்து பார்த்தா, நான் காளி மாதிரி நின்னுகிட்டு இருந்தேன். அவன் கைல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு விட்டுடேன். அவங்க அம்மா என்னை பார்த்த பார்வை இருக்கே ? அம்மா என்னை அடி வெளுத்திடாங்க. நான் ஒரு சொட்டு கண்ணீர் விடணுமே, நோ 
அடிகிறதுக்கு முன்னாடியே அழுது நடிப்பேன் நான். ஆனா அன்னைக்கு அழவே இல்லை. அவங்க மறுநாளே ஊருக்கு கிளம்பி போய்டாங்க.எங்க அம்மா ரெண்டு நாள் பேசலை. எனக்கு அது கவலை இல்லை, என் மாம்பழம் போச்சே !! இப்போ வரை அவங்களை பார்க்கலை.பார்க்கவும் விரும்பலை. ஒரு வேளை அந்த பையன் மன்னிப்பு கேட்டா , மன்னிகவா வேண்டாமான்னு யோசிப்பேன்.

ஷங்கர் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டப்போ கூட நான் ரசிச்சு மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்கமா ,எங்க அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்கன்னு சொல்லமா ஓ!! தாராளமா பண்ணிக்கலாமே, அப்படீன்னு சொல்லிட்டேன். ஷங்கர் பயந்து போய், தப்பான நேரத்துல கேட்டுடோம்னு நினச்சு, மறு நாள் மாம்பழம் இல்லாம அதே விஷயத்தை திருப்பி கேட்டு உறுதி படுதிகிட்டங்க!!

நான் கடவுளா இருந்தா வருஷம் முழுவதும் மாம்பழம் கிடைக்கிற மாதிரி மாத்திருவேன். how is my idea?

மாம்பழம்- சொர்க்கம்!!!

- மகா.

மாணவனின் உயிர் காக்க உதவுவோம்

Apr 18



அ.சக்திவேல் - திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் பிரிவில் தற்பொழுது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். கடந்த 17-02-2012 அன்று விடுதி மொட்டை மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வரை மருத்துவச் செலவிற்காக இலட்சக்கணக்காக பணம் செலவழித்துள்ளனர். சக்திவேலின் உடல் நிலை மெல்ல தேறி வந்தாலும், இன்னும் சுயநினைவின்றியே இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப் படி மேலும் சில சிகிச்சைகள் மற்றும் ஆப்பரேசன் செய்ய சுமார் எட்டு இலட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

சக்திவேலின் குடும்பம் ஏழை விவசாயக் குடும்பம் ஆதலால் G.C.E முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் மற்றும் நல்உள்ளம் படைத்தவர்களிடம் பணஉதவி செய்யுமாறு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக நிதியுதவி பெறும் பொருட்டு சக்திவேல் உடன் படிக்கும் மாணவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு உயிரின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. எட்டு இலட்சம் என்பது நம்மில் பலருக்கு மலைப்பான தொகையாக தோன்றினாலும், அதையே ஒரு 200 பேர் ஒவ்வொருவரும் தலா ரூபாய் 4000 அல்லது ஒரு 400 பேர் தலா ரூபாய் 2000 என்று பகிர்ந்து உதவும் பொழுது ஒரு மாணவனின் உயிர் காப்பாற்றப்படும்.

சக்திவேலின் வகுப்புத் தோழன் எடிசன்முத்துராஜ் மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்காக நிதியுதவி திரட்டி வருகிறார்கள்.

தங்களால் ஆன பண உதவியை எடிசன்முத்துராஜ் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பித்தால், அது சக்திவேலின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

பனம் செலுத்திய தகவல்களை edisonmuthuraj@gmail.com (cc to: vinbalakumar@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், கணக்கை நிர்வகிக்க சுலபமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

(Financial help needed for the medical treatment of Mr.Sakthivel, III yr student of Mech, GCE, Tirunelveli. He has met with an accident recently and suffered a severe head injury. Alumni Friends and Good hearted people, please contribute through the following account numbers) 


P. EDISON MUTHURAJ
(STUDENT, GCE, TIRUNELVELI)
CANARA BANK
A/C NO: 8656101002310
Address: Government College of Engineering Campus - Canara Bank Bracnh
Tirunelveli - 627007
IFSC CODE: CNRB0008656
PH NO: 9688316224

M. LOGANATHAN
(Uncle of Sakthi)
ICICI Bank,
A/C no: 620701001262
Address: ICICI Bank Building, Main Road, Vamandampalayam - 638462
IFSC Code: ICIC0006207
Vamandampalayam,
Ph. no: 9486519862

SAM TITUS
(Alumni, Director of Spark Society, Tirunelveli)
ICICI BANK
SIDDHAPUDUR BRANCH
COIMBATORE
A/C NO: 154801502141
IFSC CODE: ICIC0001548
PH NO: 9944122036

சக்திவேலின் சான்றிதழ்கள், மற்றும் இதர விவரங்கள்.






நம் அனைவரது பிரார்த்தனைகளும், உதவியும் சக்திவேலின் உயிரைக் காக்கும் பெரும்வலிமை கொண்டவை. 

நன்றி !
வி.பாலகுமார்
(செல்: 9486102490)
vinbalakumar@gmail.com

I-POD ROMANCE

Jan 20

தலைப்பை பார்த்தவுடனே ஏதோ காதல் மயமான பதிவு அதாங்க ,"Romantic post "அப்படீன்னு நீங்க நினைச்சா, அது நூறு சதம் சரிதாங்க!! ஆனா இந்த கதைக்கு சுப முடிவா , சோக முடிவானு எனக்கே தெரியலங்க! படிச்சுட்டு நீங்க தான் சொல்லணும்.

இந்த மாதம் எங்களோட wedding day வருது. மொத்தமா ஆறு வருஷம் முடிச்சு போச்சுது . ஓடினதே தெரியலை அப்படீன்னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம். எல்லாம் தெரிஞ்ச வேகத்தொடதான் ஓடி போச்சுது. Romance-ந கிலோ என்ன விலைன்னு கேக்குற என்கூட (நாங்க எல்லாம் மனசு முட்ட காதல் இருந்தாலும் வெளில காட்ட மாட்டோம்ல !!!) வாழ்க்கைல எல்லாத்துக்கும் Romantic touch வேணும்னு நினைகிற ஷங்கர் ஆறு வருஷம் குப்பை கொட்டினது, கொட்ட போறது எல்லாம் இமாலய சாதனைதான். ஆனா ஷங்கர் இதுக்கு எல்லாம் அசந்து போற ஆளே கிடையாது. வருஷா வருஷம் ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் எனக்கு எதாவது surprise gift கொடுக்கனும்கிரத வாழ்கையின் லட்சியமா வைச்சுட்டு இருக்காரு என் புருஷன். ஆனா நானும் சளைக்காம கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த பரிசை குறைசொல்ல தயங்கினதே இல்லை. அவரும் அதுக்கு அசந்து போனதே இல்லை. ஏன்னா, பின்னால ஒருநாள் எப்பிடிப்பா இப்பிடி யோசிச்சு வாங்கின? very useful அப்படீன்னு சொல்லி பாராட்டி தள்ளி இருக்கேன். அப்படி வந்த ஒரு பரிசு தான் இந்த ipod .

உங்களுக்கு அறிவு எங்க போச்சுது, எனக்கு இருக்கிற வேலைக்கு பாட்டு கேக்கவா நேரம் , தண்டத்துக்கு செலவு பண்ணி இருக்கேங்க . இந்த காசு இருந்தா பத்து தடவை சரவணா பவன் ல சாப்பிட்டு இருக்கலாம் அப்படீன்னு கத்தி அழிச்சாட்டியம் பண்ணி , எல்லாம் முடிஞ்சுது. வழக்கம் போல ஒரு பத்து நாளைக்கு பிறகு பாட்டு கேக்கவும் ஆரம்பிச்சாச்சு. கர்ணனோட கவச குண்டலம் மாதிரி எனக்கு ipod மாறி போனதில் பெரிய ஆச்சர்யம் இல்லை .
அது இல்லாம நான் இல்லை நான் இல்லாம அது இல்லைன்னு ஒரு நிலைமை .எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி நடக்கிற வரை.

வழக்கம் போல எங்க apartmentl -ல சுதந்திர தினம் கொண்டாட்டம் வந்தது.. நான் ஒரு "மனுஷர் அண்டா மரகுரங்கு"என் புருஷனுக்கோ எப்பவும் ஒரு பத்து பேர் வீட்டுல இருக்கணும். வீட்டுக்கு உழைக்கவே அழுவேன் நான். ஆனா ஊருக்கு உழைக்கும் உத்தமர் என் புருஷன். god is the best match maker .வழக்கம் போல எல்லா பொறுப்பும் ஷங்கர் தலையில .அதோட என் நச்சரிப்பும் , கொஞ்சம் கூட அசரவே இல்லையே மனுஷன்.

என்னை தவிர எங்க ப்ளாட்ல இருக்கிற எல்லாரும் ஆர்வமா நிகழ்ச்சி தயாரிப்புல பங்க எடுத்தாங்க. . கூட்டத்தை பார்த்தாலே எனக்கு ஆகாது. எங்க ப்ளாட்ல இருந்து யாரும் எங்க வீட்டுக்கு என்னை தேடி வந்ததே இல்லை. எல்லாரும் ஷங்கரை தேடித்தான் வருவாங்க. இதுல அழகான பொண்ணுங்க வேற. "ஷங்கர் இருக்காரா , program பத்தி discuss பண்ணனும் " அப்படீன்னு வருவாங்க. பரவாயில்லை என்கிட்டே சொல்லுங்க நான் சொல்றேன்னு சொன்னா, இல்லை நாங்க அவர்கிட்டயே பேசிக்கிறோம் அப்படீன்னு கடுப்பை கிளப்புவாளுங்க. எல்லாம் சேர்ந்து நான் ஒரு நிலையில இருந்தேன்.

கொண்டாட்ட நாளும் வந்தது. பாருங்க, நான் பண்ணின ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்கு சொல்லவே மறுத்துட்டேன். சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தேவையான் எல்லா தேச பக்தி பாடல்களும் , தேசிய கீதம் உட்பட எல்லா பாட்டும் என் i-pod லதான் பதிவு ஆகி இருந்துது . எங்களுக்கும் தேச பக்தி உண்டுல்ல !! ஷங்கர் பல முறை கேட்டு என் சம்மதம் வாங்கின பின்னால தான் இது நடந்துது. ஆனா அதுக்கு அப்புறம் ?

நிகழ்ச்சியும் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. நான் வழக்கம் போல ஒன்னும் பண்ணலை.என் பொண்ணுக்கும் , ஷங்கர் க்கும் என்னை பார்க்க நேரம் இல்லை. அவ்வளவு பிஸி. எனக்கு உலகமகா கோபம்.ஆனா வெளி காட்ட முடியலை. நிலைமை இப்பிடி இருக்க , ரெண்டு நாள் ஓடி போச்சுது. திடீர்னு காலைல ஆறு மணிக்கு எனக்கு i-pod ஞாபகம் வந்தது.எனக்கு இருந்த கோபத்துல அதை பத்தி நினைக்கவே மறந்துட்டேன். என் நல்ல நேரமா ஷங்கர் கெட்ட நேரமான்னு தெரியலை. அது தொலைஞ்சு போச்சு அப்படீங்கிற விஷயமே அப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் உறைச்சுது. now the ball was in my court . இதை விட்டா வேற நல்ல சந்தர்பம் கிடைக்காது மஹா , go ahead அப்படீன்னு எனக்குள்ள ஒரு அசிரீரி ஒலிச்சுது. சும்மாவே ஆடுவேன். இதுல பாட்டு வேற போட்டு விட்டா கேக்கவா வேணும் ?

"என் மேல கொஞ்சமாது அன்பு இருந்தா இப்பிடி பண்ணி இருப்பீங்களா,? எனக்கு அந்த i-pod பார்க்குபோது எல்லாம் நம்ம காதல்தான் நினைவுக்கு வரும். அதை போய் தொலைச்சுட்டு வந்துடீங்க , நம்ம காதலே போச்சுது அப்படி இப்படீன்னு நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினதுல ஷங்கர் உச்சகட்ட கவலைல இருந்தாப்ல . He spent really one full day to search for that.எனக்கு புதுசு வேண்டாம் அதுதான் வேணும்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தேன். ஒரு ஆயிரம் தடவைஎன் கிட்ட மன்னிப்பு கேட்ட பின்னாலயும் ஷங்கர் கவலை படுறதை நிறுத்தவே இல்லை. எனக்கு பெரிசா பாதிப்பு இல்லை. நான் திட்டணும்னு நினச்சேன் திட்டிட்டேன். ஷங்கர் தான் காதல் பரிசு தொலைஞ்சு போச்சேன்னு ஒரு நாள் பூரா சரியாய் சாப்டாம தேவதாஸ் மாதிரி அலைஞ்சுட்டு இருந்தாரு. நாளும் ஓடி போச்சுது.

மறுநாள் காலைல எனக்கு பிடிக்காத , எப்போவும் ஷங்கர் பண்ற வேலைய அதுதாங்க washing machine la இருந்து துணி காய போடுற வேலையை பண்ணிட்டு இருந்தேன். எப்போவும் துவைக்க போடுறது என் வேலை. காய போடுறது, ஷங்கர் வேலை. ஷங்கர் மேல உள்ள கோபத்துல வேண்ட வெறுப்பா அந்த வேலைய பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் அந்த விஷயம் என் தலைல இடி விழுற மாதிரி நடந்தது. washing machine அடியில ipod !! ஐயோ !!அப்போதான் வழக்கம் போல பாக்கெட் ல என்ன இருக்குன்னு பார்ககாம கடமைக்கு ஷங்கர் சட்டையை துவைக்க போட்ட என் flashback ஞாபகம் வந்தது. surf போட்டு துவைச்ச பின்னால அது பாடினா ஆச்சர்யம். ஆனாலும் அநியாத்துக்கு அது நல்ல புள்ளையா பாடுச்சுது. ஷங்கர் காதல் பாட வைச்சுது போல.பிள்ளையாரப்பா , நீ உன் பக்தைய கை விட்டதே இல்லை . இது மட்டும் ஷங்கர் கைல கிடைச்சு இருந்துது ? , பிள்ளையாரப்பா i love you .

வழக்கம் போல ஆபிஸ் ல இருந்து சோகமா ஷங்கர் என்ட்ரி கொடுத்தாரு . பின்ன காதல் நா உயிரை கொடுக்குற category ஆச்சே நம்ம ஆளு. நான் விட்டேத்தியா , ரொம்ப கவலைப்பட வேணாம் ,நம்ம காதல் எங்கயும் போகலை , திரும்ப கிடைச்சாச்சு அப்படீன்னு சொன்னேன். பின்ன வார்த்தைல கொஞ்சம் ஆர்வம் தெரிஞ்சாலும் நான் தொலைஞ்சேன். He is very smart enough.ஷங்கர் முகத்துல ஒரு 10000 watts பல்பு எரிஞ்சுது. எங்க இருந்துது எங்க இருந்துது அப்படீன்னு ஆயிரம் கேள்வி. அதுக்கு நான் , "love தான் ஒழுங்க பண்ண தெரியலை , தேடுறதை கூடவா ஒழுங்கா செய்ய தெரியாது" அப்படீன்னு அலுத்துகிட்டேன்.பின்ன , நாதாரித்தனம் பண்ணினாலும் நாசுக்க பண்ணனும் .ஐயோ பாவம் ,அந்த i pod -யா ஒரு அரை மணி நேரமா காதலா பார்த்துட்டு இருந்துது அந்த அப்பாவி ஜீவன் !!!

-- மகா

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Dec 31

நம்ம பார்வை எப்போதும் உலகளாவிய பார்வை தான். :)

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !




அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்

Aug 21


அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !

(படம்: நன்றி : இணையம்) 

குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்

Jun 30

நன்றி - வெயிலோன் திரை



(வணிக நோக்கமில்லாத பகிர்வு மட்டுமே)

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்