மாம்பழம்

செழிப்பான மல்கோவா மாம்பழம், அதுவும் பறிப்பதற்கு ஏதுவா தாழ்ந்த கிளைகள், அதுக்கு அருகில் நான், ஒரு கையில் மாம்பழம், இன்னொரு கையில் சுஜாதா புத்தகம்! அட்டகாசமான தனிமை!! பிள்ளையாரப்பா!!! சொர்க்கம் பூமியில் கண்டேன்!! இதுதான் அடிக்கடி எனக்கு வரும் கனவு, 

எனக்கு எழுத்து கூட்டி படிக்க தெரிந்த காலத்தில் இருந்தே இந்த கனவு வரும். ஆனா கையில் உள்ள புத்தகம் மட்டும் வயதுக்கு ஏற்றாற்போல் மாறும். சிறுவர்மலரில் இருந்து பயணம் ஆரம்பித்தது. இப்போ இந்த கனவு முக்கியமில்லை. இந்த கனவின் நாயகிதான் முக்கியம். சே !! என்னப்பா நீங்க நாயகின்னு சொன்னவுடனே நாந்தான்னு தப்பா நினச்சுகிடீங்க!! ஐயோ கடவுளே!! ஏன்தான் என்னை அழகா படைச்சியோ? சரி விடுங்க!!! கதையோட நாயகி என்னை விட, ஏன் ஐஸ்வர்யா ராய்- விட அழகான என்னோட மாம்பழம் தான், இந்த பதிவே என்னோட ஆதர்ச நாயகிக்கு ஒரு அர்பணிப்புதான்.

சின்ன புள்ளைல படிச்ச பாடம் "மனிதன் உயிர் வாழ இன்றி அமையாத தேவைகள் நிலம் நீர் காற்று". இது கூட கடவுள் மாம்பழத்தையும்
சேர்த்து இருந்தா எவ்வளவு நல்ல இருந்து இருக்கும்?
மாம்பழம் - இந்த வார்த்தை சொல்லும்போதே எனக்கு சொர்கத்தை பார்த்துவிட்ட உணர்வு.எதை வேண்டுமானாலும் இதுக்காக விட்டு கொடுப்பேன், ஆனா யாருக்காகவும் இதை விட்டு கொடுக்க மாட்டேன்
அப்பா சின்ன வயசில, மாம்பழம் வேணுமா, ரஜினி படம் பார்கனுமா(ரஜினி படம் வெளி வந்த அன்னைக்கே பார்ப்பதை ஒரு கொள்கையா வைத்து இருந்தேன்) சீண்டி பார்த்த போது கொஞ்சம் கூட யோசிக்காம, மாம்பழம் தான் வேணும்பா என்றேன். ஆனா மாம்பழம் சாப்டுகிட்டே ரஜினி படம் பார்த்தது வேற கதை.

ஜென் துறவிகள் தேநீர் குடிப்பதை கூட ஒரு தவமாய் நினைத்து, ரொம்ப சந்தோஷமா ஒவ்வொரு துளியையும் ரசித்து குடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருப்பீங்க. அதை நேரில் பார்க்கணும்னு ஆசைபடீங்கன்னா நான் மாம்பழம் சாப்பிடும்போது என் வீட்டுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா உங்களுக்கு பங்கு தர மாட்டேன்.

மாம்பழம் சாப்பிடும்போது அதுக்காக மட்டுமே கடவுள் என்னை படைச்சதா நினைச்சுக்குவேன். வேற படிப்பு , வேலை அப்படீன்னு எந்த கெட்ட விஷயத்தயும் நினைக்க மாட்டேன்.

மாம்பழ காலம் வந்துட்டாலே, எங்கப்பாக்கு கதி கலங்கிரும். சின்ன வயசில இருந்து நான் எதுக்காகவும் அடம் பிடிக்கவே மாட்டேன். எதை வாங்கி கொடுத்தாலும் மறு பேச்சு பேசுவதே இல்லை. உடை, அலங்கார பொருட்கள் எதுலயும் பெரிசா நாட்டம் இருந்தது இல்லை. அம்மா, அப்பா சொன்னா மறு பேச்சு சொல்லமா கேட்டுக்குவேன். ஆனா மாம்பழ விஷயத்தில் மட்டும் என் பேச்சு மட்டும்தான் எல்லோரும் கேக்கணும்.

சின்ன வயசில இருந்தே என் செல்லம் பிள்ளையாரோட ஒரு ஒப்பந்தம். எனக்கு கிடைக்கிற இல்லை நான் வாங்குற முதல் மாம்பழம் அவருக்குதான். கொடுக்க கஷ்டமா இருந்தாலும், யோசிக்கமா கொடுத்துருவேன். என் தங்கம் , அதுக்கு, கை மேல இல்லை இல்லை கை கொள்ளாம மாம்பழம் கொடுக்கும்.

மாம்பழ காலம் முடிஞ்ச கொஞ்ச நாளைக்கு எல்லாம் நான் தாடி வைக்காத தேவதாஸ்தான். நம்ம தமிழ் செய்யுள் படிக்குபோது அக பாடல்களில் தலைவிக்கு வருமே ஒரு பசலை நோய், அந்த மாதிரி ஒரு நோய், எனக்கு மாம்பழ காலம் முடிந்தவுடனே வரும். ஆனா மணந்தா மகாதேவன் , இல்லேன்னா மரண தேவன் என்கிற மாதிரி, செயற்கை மாம்பழ பானங்களில் என் மனம் லயிப்பதே இல்லை.

சின்ன வயசில நடந்த விஷயம்,இன்னும் மறக்கவே இல்லை. எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். மாம்பழ காலம். வழக்கம் போல அப்பா மாம்பழம் வாங்கி நிரப்பி இருந்தாங்க. அரிசி பானையில் போட்டு வைக்கும் வழக்கம். காலையில எந்திச்சவுடனே நேரா வந்து பானை திறந்து எல்லா பழத்தையும்  ஒரு தடவை ஆசை தீர பார்ப்பேன். இது மாதிரி ஒரு நாளில் பல முறை நடக்கும். பள்ளியில் வைத்தும் ஒரே மாம்பழ கனவுதான். மத்யானம் சாப்பிட பழம் எடுத்துட்டு போக மாட்டேன் எல்லோருக்கும் பங்கு கொடுக்கணுமே!!

இப்படியே போயிட்டு இருந்தது. அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்கு, எங்க அம்மாவோட பள்ளி தோழி அவங்க குடும்பத்தோட வந்து இருந்தாங்க. அந்த பையன் ஒரு அஞ்சாவது படிச்சுட்டு இருந்தான்னு நினைக்கிறேன். நான் மறுநாள் காலையில் எழுந்து என் கடமைகளை (?) எல்லாம் பொறுப்பா பண்ணிட்டு , ஸ்கூல் கிளம்பி போய்ட்டேன். ஸ்கூலில் வழக்கம் போல் என் மாம்பழ கனவு. வீட்டுக்கு வந்து பார்த்தா, என் இதயமே ஒரு நிமிடம் நின்னுரும் போல ஒரு உணர்வு. எனக்குள்ள ஒரு எரிமலை!!! படுபாவி, அந்த பையன் ஒரு மாம்பழத்தை சாப்டுகிட்டு இருந்தான். எனக்கு எப்பிடி இருந்து இருக்கும்னு யோசிச்சு பாருங்க. நான் எதையும் யோசிக்கலை , 
வில்லன் கிட்ட இருந்து கதாநாயகியை காப்பாத்த போற ஹீரோ மாதிரி அவன் மேல பாய்ஞ்சேன் . அவன் சோட்டா பீம் மாதிரி இருப்பான். நான் முருங்கக்காய்க்கு கால் முளைச்ச மாதிரி இருப்பேன். (சின்ன வயசுல பா) 

அவங்க அம்மா, "பார்வதி , உன் பொண்ணை பிடி , அவனடிச்ச தாங்க மாட்டா, சின்ன பொண்ணு" அப்படீன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள , ஒரு சத்தம். என்ன ஆச்சுன்னு எங்க அம்மா பயந்து போய் வந்து பார்த்தா, நான் காளி மாதிரி நின்னுகிட்டு இருந்தேன். அவன் கைல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு விட்டுடேன். அவங்க அம்மா என்னை பார்த்த பார்வை இருக்கே ? அம்மா என்னை அடி வெளுத்திடாங்க. நான் ஒரு சொட்டு கண்ணீர் விடணுமே, நோ 
அடிகிறதுக்கு முன்னாடியே அழுது நடிப்பேன் நான். ஆனா அன்னைக்கு அழவே இல்லை. அவங்க மறுநாளே ஊருக்கு கிளம்பி போய்டாங்க.எங்க அம்மா ரெண்டு நாள் பேசலை. எனக்கு அது கவலை இல்லை, என் மாம்பழம் போச்சே !! இப்போ வரை அவங்களை பார்க்கலை.பார்க்கவும் விரும்பலை. ஒரு வேளை அந்த பையன் மன்னிப்பு கேட்டா , மன்னிகவா வேண்டாமான்னு யோசிப்பேன்.

ஷங்கர் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டப்போ கூட நான் ரசிச்சு மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்கமா ,எங்க அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்கன்னு சொல்லமா ஓ!! தாராளமா பண்ணிக்கலாமே, அப்படீன்னு சொல்லிட்டேன். ஷங்கர் பயந்து போய், தப்பான நேரத்துல கேட்டுடோம்னு நினச்சு, மறு நாள் மாம்பழம் இல்லாம அதே விஷயத்தை திருப்பி கேட்டு உறுதி படுதிகிட்டங்க!!

நான் கடவுளா இருந்தா வருஷம் முழுவதும் மாம்பழம் கிடைக்கிற மாதிரி மாத்திருவேன். how is my idea?

மாம்பழம்- சொர்க்கம்!!!

- மகா.

4 comments:

Balakumar Vijayaraman said...

good narration, keep writing :)

Balaraman said...

Interesting.. Good style.. Nice writing
orbekv.blogspot.in

Deepa said...

முக்கனியில் முதல் கனியாச்சே.. இங்கேயும் அதே கதை தான்.. அதுவும் கை முழுதும் சாறு வழிய விட்டு சாப்பிடுற சுகமே சுகம்.. :)

இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கும் ஃப்ரிட்ஜ்ல பாதி இடத்தை மாம்பழம் தான் அடைச்சுட்டு இருக்கும்... அடுத்து பத்து மாதத்திற்கான காத்திருப்பு.. (மாம்பழத்துக்கு தான்.. :) )

Anonymous said...

"மாம்பழ சீசன் முடியலாம் ஆனா மாசா சீசன் முடியாது " என்ற விளம்பரத்தை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது...
//ஷங்கர் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டப்போ கூட நான் ரசிச்சு மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்கமா ,எங்க அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்கன்னு சொல்லமா ஓ!! தாராளமா பண்ணிக்கலாமே, அப்படீன்னு சொல்லிட்டேன்.//
superb...
எச்சில் ஊற மாம்பழத்தை சுவைத்து உண்பது ஒரு சுகானுபவம் !
-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்